உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகள்

புதுதில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை வழங்குவதற்காக அரசியலமைப்பின் 130 வது பிரிவைத் திருத்தும் வகையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துமாறு ராஜ்யசபா உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான திரு பி வில்சன்,ஒன்றிய அரசை வலியுறுத்தி, மத்திய சட்ட அமைச்சர் ஆர்.எஸ்.பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நீண்டுகொண்டே போகும் வழக்குப்பட்டியல்களுக்கு தீர்வு காண, உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு இன்னொரு தீர்வாக பிராந்திய அமர்வுகளை உருவாக்கக்கோருவது இது முதல் முறையல்ல. 1956 இல், உச்ச நீதிமன்றம் 8ல் இருந்து 11 ஆக விரிவுபடுத்தப்பட்டது; 1960 இல், 11 முதல் 14 ஆகவும் ; 1977 இல், 14 முதல் 17 ஆகவும்; 1986 இல், 17 முதல் 26 ஆகவும்; மற்றும் 2008 இல், 26 முதல் 31 ஆகவும் உயர்த்தப்பட்டது. [1]எப்படி பார்த்தாலும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒட்டுமொத்த வழக்கு தீர்வுகளின் விகிதத்தை பாதிக்காது என்று பகுப்பாய்வுகள் கூறுகின்றன. புதிய நீதிபதிகளின் நியமனத்தின் விளைவாக வழக்குகளின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் மட்டுமே மாறுபடும் ( படிக்க: நேரம் அதிகரிப்பு). [2]

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் பின்னால் இருக்கும் கட்டமைப்பு சிக்கல்கள் தொடர்ந்து கவனிக்கப்படாமல் உள்ளன. முதல் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் பரந்த அதிகார வரம்பாகும் – இது அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளில் உண்மையான அதிகாரம் பொருந்திய நீதிமன்றமாக மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும்  மேல்முறையீடு வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் கடைநிலை நீதிமன்றமாகவும் உள்ளது. நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் இருந்தாலும் , அதன் சிறப்பு விடுப்பு அதிகாரத்தின் மூலம் பெரும்பாலான நேரங்கள், கீழ் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் (உயர் நீதிமன்றங்களில் இருந்து வரும் அதிகபட்ச மேல்முறையீடுகளுடன்) மேல்முறையீடு வழக்குகளை விசாரிக்க செலவிடப்படுகிறது . 3] . இந்த சிறப்பு விடுப்பு அதிகார வரம்பு முதலில் குறிப்பிட்ட  சூழ்நிலைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். [4] உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பற்றிய அனுபவ ஆய்வு [5]இந்த பிரச்சினையில் மேலும் பல முக்கிய தகவலைகளை வழங்குகிறது. ஆய்வின் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமை ஒரு சில விஷயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குகளில்  குற்றவியல் வழக்குகளே அதிகம் என்பது கண்டறியப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள உரிமையியல் வழக்குகளின் சதவீதத்தில், மிகப்பெரிய வகை ‘சேவை சார்ந்த விஷயங்கள்’ ஆகும். அரசியலமைப்பு விவகாரங்கள், பொது நல வழக்குகள் (பிஐஎல்) ஆகியவை உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்படும் ஒட்டுமொத்த வழக்குகளில் சொற்பமான சதவீதத்தை கொண்டு (10% க்கும் குறைவாக) உள்ளது.    

 சட்டத்தின் கணிசமான கேள்விகளை கொண்ட வழக்குகளை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுகளை உச்சநீதிமன்றம் அமைக்கும்போதுதான்  இந்த நிலைமை இன்னும் மோசமடைகிறது . இந்த தரவுத்தொகுப்பில் கிட்டத்தட்ட 90 சதவீத வழக்குகளை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் உருவாக்கப்பட்டதாகவும், மீதமுள்ள பெரும்பாலான வழக்குகளை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் அமைக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்த வழக்குகளில் ஒரு சிறிய பங்கை மட்டுமே விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் அமைக்கப்பட்டன. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அல்லது சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சவால்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கணிசமான சதவீதம் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளால் விசாரிக்கப்பட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. PIL களிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது. PIL களில் 71 சதவீதத்திற்கும் மேல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளால்  விசாரிக்கப்படுகின்றன. [6]

உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் உள்ள நேர கட்டுப்பாடுகள் மற்றும் மேல்முறையீட்டு விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு இந்த ஆய்வில் இருந்து வெளிவந்த மற்றொரு முக்கியமான அவதானிப்பாகும்.. உயர் நீதிமன்றங்களின் மேல்முறையீடுகளில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீடுகள் பெரும்பகுதியைக் கொண்டிருந்தது, வடகிழக்கு உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல்முறையீடுகள் எதுவும் இல்லை . மேலும், இந்த மேல்முறையீடுகள் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளின் வெளியீட்டில் 90 சதவீதத்தை உருவாக்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுகளின் முடிவுகள் முக்கியமாக  உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பு தொடர்பான விஷயங்களை சார்ந்தே இருந்திருக்கின்றன. [7] மற்றொரு ஆய்வின் கண்டுபிடிப்புகளும்  இந்த வாதத்தை உறுதிப்படுத்துகின்றன: டெல்லிக்கு அருகே வசிப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் டெல்லிக்கு தொலைவில் வசிப்பவர்களை விட அதிகமாக இருக்கிறது. [8]2011 இல், உச்ச நீதிமன்றத்திற்கு மிக அருகில் இருந்த நான்கு உயர் நீதிமன்றங்கள் அதிக முறையீட்டு விகிதங்களைக் கொண்டவையாக இருந்திருக்கின்றன. இந்த மாநிலங்களின் மக்கள் தொகை  நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 7.2% மட்டுமே என்றாலும், இந்த நீதிமன்றங்களின் மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தின் மொத்த மேல்முறையீடுகளில் 34.1% ஆகும். [9] கூடுதலாக, உச்ச நீதிமன்றத்தை (மத்திய மாநில அரசுகள்) சுலபமாக நாடுவதற்கான வழிகளைக் கொண்டவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். [10] மேல்முறையீட்டுக்கான மொத்த செலவைக் கணக்கிடும் போது மூத்த வழக்கறிஞர்களுக்காக செலவிடப்படும் நிதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தைப் பற்றிய பொதுமக்களின் பார்வையானது  அங்கு அதிக அளவிலான வழக்குப்பட்டியல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். அவர்கள் உச்ச நீதிமன்றத்தை பிழையற்ற, அதிகாரங்களுக்கு அடிபணியாத, என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு நிலையமாக கருதுகின்றனர். கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மீது பெரிதும் நம்பிக்கை வைக்காமல், இந்த கீழ்மை நீதிமன்றங்களுக்குப் உச்சநீதிமன்றம் பொறுப்போடு வழிகாட்டுகிறது என்று நம்புகிறார்கள். [11]உச்ச நீதிமன்றத்தின் வழக்கு சுமைகளில் சிறப்பு விடுப்பு மனுக்கள் அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை. உச்ச நீதிமன்றத்தின் முன் வரும் இரண்டு வகை வழக்குகள் உள்ளன: ‘சேர்க்கை விஷயங்கள்’ மற்றும் ‘வழக்கமான விசாரணை விஷயங்கள்’. சேர்க்கை  விவகாரங்கள் என்பது உச்சநீதிமன்றத்தால் வழக்கமான விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளாகும். சிறப்பு விடுப்பு மனுக்கள் உட்பட இந்த வழக்குகளுக்காக  வேலை வாரத்தில் இரண்டு நாட்கள் செலவிடப்படுகின்றன. மீதமுள்ள மூன்று நாட்கள் வழக்கமான விசாரணைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன [12] சட்டத்தின் முக்கிய கேள்விகள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த உச்ச நீதிமன்றம் போதிய நேரம் ஒதுக்குவதில்லை.

இந்தக் காரணங்களால், உச்ச நீதிமன்றத்தின் ‘பிராந்திய அமர்வுகளை’ அறிமுகப்படுத்துவதன் மூலம், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீட்டுப் பணிகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகின்றன. அரசியலமைப்புப் பிரிவு, அரசியலமைப்பு விஷயங்களைக் கையாள்வது, டெல்லியில் அமைந்திருக்கும், மேல்முறையீட்டு விஷயங்களைக் கையாளும் பிரிவுகள் நாட்டிற்குள் வெவ்வேறு பிராந்தியங்களில் அமைந்திருக்கும். [13] இந்திய சட்ட ஆணையம், பல சந்தர்ப்பங்களில், உச்ச நீதிமன்றத்தை வெவ்வேறு பிரிவுகளாக்க வேண்டும் என்று கேட்கிறது. [14] 1986 இல், 95 வதுசட்ட ஆணையத்தின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தை (i) அரசியலமைப்புப் பிரிவாகவும் (ii) சட்டப் பிரிவாகவும் பிரிக்க முன்மொழிந்தது. எந்தப் பிரிவுக்கு முன் எந்த வகையான வழக்குகள் தோன்றும் என்பதையும் அந்த அறிக்கை வகைப்படுத்தியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட குறுகிய காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. [15] அதன்பிறகு, 1988ல், 125 வது சட்ட ஆணையம்  அறிக்கை மற்றும்  95 வது சட்ட ஆணையம்  அறிக்கையில் செய்யப்பட்ட பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியது . உச்ச நீதிமன்றத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதன் மூலம் நீதியைப் பரவலாக அணுக முடியும் என்றும் சட்ட ஆணையம் நம்பியது,. இதனால் உச்ச நீதிமன்றத்தை அணுக விரும்பும் வழக்குதாரர்களின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. [16]  

முந்தைய அறிக்கைகளின் கருத்தை  எதிரொலிக்கும் வகையில், பதினெட்டாவது சட்ட ஆணையம் , 2009ல், வடக்கு மண்டலமான டெல்லியிலும் , தெற்கு மண்டலங்களான  சென்னை மற்றும் ஹைதராபாத்திலும், கிழக்கு மண்டலமான கொல்கத்தாவிலும்,மேற்கு மண்டலமான மும்பையிலும்,மொத்தம்  நான்கு முறைமன்ற தீர்ப்பு விசாரிப்பு அமர்வுகளை அமைக்க பரிந்துரைத்தது. இந்த நான்கு முறைமன்ற தீர்ப்பு விசாரிப்பு அமர்வுகளின் செயல்பாடு, குறிப்பிட்ட பிராந்தியத்தின் உயர் நீதிமன்ற உத்தரவுகள்/தீர்ப்புகளிலிருந்து எழும் மேல்முறையீட்டுப் பணிகளைக் கையாள்வதாகும். அரசியலமைப்பு மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்களை நிர்வகிக்க டெல்லியில் அரசியலமைப்பு அமர்வை  அமைக்கவும் சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. [17]இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு உதவும். அதே நேரத்தில் நாட்டின் முக்கிய விஷயங்கள் மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள் தொடர்பாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் நேரம் ஒதுக்க உதவும். அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நீதிக்கான உரிமை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியிலிருந்து தொலைதூர இடங்களில் வசிக்கும் வழக்குரைஞர்களின் நலனுக்காகவும் இந்தப் பரிந்துரை இருந்தது. [18] 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் துணை ஜனாதிபதி, எம். வெங்கையா நாயுடு, பிராந்திய அமர்வுகளை நிறுவுவதற்கு ஆதரவாக வலுவாக வாதிட்டார், இந்த நடவடிக்கை நீதித்துறையை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் என்று அவர் நம்பினார். இதன்மூலம், வழக்குத் தாக்கல் செய்பவர்கள் டெல்லிக்குச் செல்வதற்கான செலவுகளைத் தவிர்க்கலாம். [19] இந்த சாராம்சத்தில், நீதி இன்னும் அணுகக்கூடியதாக இருக்கும்.

இருப்பினும், அணுகல் என்பது இரண்டு முனைகள் கொண்ட கூர்வாளாக இருக்கலாம். பிராந்திய அமர்வுகளில் அரசியலமைப்பு நீதியை வழங்குவதை மிகவும் திறமையானதாக மாற்றும் அதே வேளையில், அது வழக்குகளின் அளவையும் அதிகரிக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், உலகின் மிகவும் அணுகக்கூடிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமையில் ஏற்பட்ட மாற்றம், அணுகல் மட்டுமே காரணம் என்று நடத்தப்பட்ட ஒரு ஆய்வு நிரூபித்தது. [20] பிராந்திய பெஞ்சுகள் உண்மையாகிவிட்டால், வழக்குகளின் அளவு பெருகுவதைத் தவிர்க்க முடியாது. வழக்குச் செயல்பாட்டில் குறைந்த செலவுகள் மற்றும் எளிதாக அணுகுதல் ஆகியவற்றுடன், பிராந்திய அமர்வுகளை அறிமுகப்படுத்துவது நிலுவையில் உள்ள நிலையை மோசமாக்கும்.

அபரிமிதமான வழக்குகள் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு பிரச்சனை, தீர்ப்புகளில் உள்ள முரண்பாடுகளாகும். நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அதிகாரம் என்ற வகையில், ஒரு குறிப்பிட்ட சட்ட விஷயத்தில் உறுதியான தீர்ப்புகளை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னர் குறிப்பிட்டபடி, உச்ச நீதிமன்றத்தின் முன் வரும் பெரும்பாலான வழக்குகள் இரண்டு நீதிபதிகள் அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்த ஆய்வில், இந்த அமர்வுகள்  மோசமான முடிவுகளை வழங்குவதையும், நிறுவப்பட்ட முன்மாதிரியை அடிக்கடி புறக்கணிப்பதையும், வளர்ந்து வரும் முரண்பாடான முன்னுதாரணத்திற்கு பங்களிப்பதையும் ஆசிரியர் கவனித்தார். பிற அதிகார வரம்புகளில், வழக்கறிஞர்கள், அவர்களின் முன்னுதாரண அறிவின் அடிப்படையில் (இது கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது), பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்கள் வழக்கு நீதிமன்றத்தின் முன் வெற்றி பெறுமா என்பது குறித்து ஆலோசனை கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்தியாவில், இந்த முரண்பாடான முன்னுதாரண அமைப்பு, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்வதை விட வழக்குத் தொடர அதிக தரப்பினரை ஊக்குவிக்கிறது. இது எப்படி ஒரு தீய சுழற்சியை உருவாக்கியது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்: உச்ச நீதிமன்றத்தின் பெரிய டாக்கெட், அதிக வேலை செய்யும் நீதிபதிகள் வழக்குகளை கவனமாக பரிசீலிக்க போதுமான நேரத்தை செலவிடுவதைத் தடுக்கிறது, இது நியாயமற்ற தீர்ப்புகள் மற்றும் தீர்க்கப்படாத சட்டங்களின் கார்பஸுக்கு வழிவகுக்கிறது, மேலும் மேலும் சுப்ரீம் கோர்ட்டில் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.[21] பிராந்திய பெஞ்சுகள் கூடுதலாக சிக்கலை மோசமாக்கும். அதிக பெஞ்சுகளுடன் ( அவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன ), அதிக வழக்குகள் வருகின்றன, அதையொட்டி, கணிக்க முடியாத சட்டக் கோட்பாடுகளின் ஒரு பெரிய அமைப்பு.        

உண்மையில், 2010 இல், உச்ச நீதிமன்றம் பிராந்திய அமர்வுகளுக்கான கோரிக்கையை நிராகரித்தது.இது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் என்று இன்னும் நம்புகிறது. [22] பிராந்திய அமர்வுகளின் கருத்து, மற்ற எந்த புதுமையான யோசனையையும் போலவே, நன்மை தீமைகளை கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றம், அதிகரித்து வரும் வழக்குப்பட்டியல் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த நன்மை தீமைகளை எடைபோட்டு, அதன் வழக்குசுமையை சமாளிக்க ஒரு முக்கிய முடிவெடுப்பது மிகவும் அவசியமாகும்.

(பூஜா மூர்த்தி DAKSH இன் ஆலோசகராக இருந்தார்)

[1] ராபின்சன், என்., 2013. கட்டமைப்பு விஷயங்கள்: இந்திய மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றங்களில் நீதிமன்றக் கட்டமைப்பின் தாக்கம். தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் லா61 (1), pp.173-208.

[2] ஹேம்ரஜனி, ஆர். மற்றும் அகர்வால், எச்., 2019. இந்திய உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமையின் தற்காலிக பகுப்பாய்வு. இந்திய சட்ட ஆய்வு3 (2), பக்.125-158.

[3] இந்திய அரசியலமைப்பின் பிரிவு 136

[4] கைதான், தருணாப். “உச்ச நீதிமன்றம் ஒரு அரசியலமைப்பு கண்காணிப்பாளராக.” தருணாப்  கைதானில், ‘உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு கண்காணிப்பாளராக'(2019) 721 கருத்தரங்கு , பக். 22-28. 2019.

[5] சந்திரா, அபர்ணா, வில்லியம் ஹெச்ஜே ஹப்பார்ட் மற்றும் சிடல் கலன்ட்ரி. “இந்தியாவின் உச்ச நீதிமன்றம்: ஒரு அனுபவ கண்ணோட்டம்.” Rosenberg, Gerald N., Sudhir Krishnaswamy, and Shishir Bail, eds., The Indian Supreme Court and Progressive Social Change (Cambridge, 2019)  (2018) இல் வரவிருக்கிறது.

[6] ஐடி .

[7] சுப்ரா குறிப்பு 6.  

[8] சுப்ரா குறிப்பு 2.

[9] மிஸ்ரா, எஸ்., 2017. இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகள்-முன்னோக்கி செல்லும் பாதை. கிறிஸ்ட் யுனிவர்சிட்டி லா ஜர்னல்6 (1), பக்.57-74.

[10] சுப்ரா குறிப்பு 2.

[11] ஐடி .

[12] https://www.hindustantimes.com/columns/the-supreme-court-does-not-need-more-judges/story-GuWVG6vKXYP02aq3QGtC6N.html (கடைசியாக அணுகப்பட்டது நவம்பர் 05, 2019)

[13] மேலதிக குறிப்பு 5. மேலும் பார்க்கவும் https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=192590 (கடைசியாக அணுகப்பட்டது அக்டோபர் 31, 2019).

[14] https://indianexpress.com/article/explained/idea-of-regional-sc-benches-and-divisions-of-the-top-court-6036692/ (கடைசியாக அணுகப்பட்டது அக்டோபர் 31, 2019).

[15] சுப்ரா குறிப்பு 10.

[16] ஐடி .

[17] இந்தியாவின் 229வது சட்ட ஆணையத்தைப் பார்க்கவும், உச்ச நீதிமன்றத்தை டெல்லியில் அரசியலமைப்பு பெஞ்சாகவும், டெல்லி, சென்னை/ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள கேசேஷன் பெஞ்சுகளாகவும் பிரிக்க வேண்டும் (2009) http://lawcommissionofindia.nic. in/reports/report229.pdf (கடைசியாக அணுகப்பட்டது நவம்பர் 04, 2019)

[18] ஐபிட். மேலும் பார்க்கவும் மிஸ்ரா, எஸ்., 2017. இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகள்-முன்னோக்கி செல்லும் பாதை. கிறிஸ்ட் யுனிவர்சிட்டி லா ஜர்னல்6 (1), பக்.57-74.

[19] https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=192590 (கடைசியாக அணுகப்பட்டது அக்டோபர் 31, 2019).

[20] சுப்ரா குறிப்பு 2.

[21] ஐடி .

[22] https://www.thehindu.com/news/national/Supreme-Court-again-says-lsquonorsquo-to-regional-Benches/article16815858.ece (கடைசியாக அணுகப்பட்டது அக்டோபர் 31, 2019).

இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியர்களின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் அவை DAKSH இன் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

Translation of https://www.dakshindia.org/regional-benches-of-the-supreme-court/  by Tamizh Ponni VP

தக்ஷ் சொசைட்டியின் இந்த வேலை கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன்-வணிகமற்ற-நோடெரிவேடிவ்ஸ் 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் உரிமம் பெற்றது .

SHARE

Share on facebook
Share on linkedin
Share on twitter
  • Rule of Law Project
  • Access to Justice Survey
  • Blog
  • Contact Us
  • Statistics and Reports

© 2021 DAKSH India. All rights reserved

Powered by Oy Media Solutions

Designed by GGWP Design